மே 30-ஆம் தேதி நடந்த விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சியை நீங்கள்
பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்கும் புரிகிறாற்போல் இதை எழுதி
விடுகிறேன்.
இன்றைய நவீன காலகட்டத்தில் குருமார்கள் தேவையா இல்லையா என்பது விவாதத்
தலைப்பு. மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் தெரியாது. இத்தலைப்பின்
உள்குத்து என்னவென்றால், நித்யானந்தாவைப் பற்றி ஒரு டாக் ஷோ செய்ய
வேண்டும் என்பதுதான். அதோடு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க
நினைத்திருக்கிறார் நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளரான ஆண்டனி. இதை அந்த
நிகழ்ச்சி ஒளிப்பதிவு ஆகிக் கொண்டிருந்த சமயத்தில்தான் என்னால் உணர
முடிந்தது. இரண்டாவது மாங்காய், ஆண்டனிக்கு என் மீது இருந்த பகையை இந்த
நிகழ்ச்சி மூலம் தீர்த்துக் கொள்வது.
கொஞ்சம் ஆரம்பத்திலிருந்து சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு நீயா நானா
நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட எனக்கு சன்மானம் எதுவும் கொடுக்கவில்லை. இது
பற்றி ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதற்குப் பழி வாங்கும்
நோக்கத்துடனேயே மே 30-ஆம் தேதி நடந்த நீயா நானாவில் என்னிடம் கேள்விகள்
கேட்கப்பட்டன. நானோ ஆண்டனி & கோபிநாத் பிரதர்ஸின் இத்திட்டம் பற்றி
எதுவும் அறியாதவனாக அங்கே அமர்ந்திருந்தேன். என்னை மடக்க வேண்டுமென்று
அவர்கள் முன்கூட்டியே திட்டமிருந்ததால் என்னால் அக்கேள்விகளை எப்படி
எதிர்கொள்வதென்று புரியவில்லை.
என்னுடைய பலவீனம் அது. உடனடியாக எதற்கும் எதிர்வினை செய்ய முடியாது.
அதைப் பற்றி நின்று நிதானமாக யோசிக்க வேண்டும். அதனாலேயே நண்பர்கள் என்னை
ட்யூப் லைட் என்பார்கள்.
நீயா நானா பற்றி இன்னொரு ரகசியம், நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும்
கோபிநாத் தானே யோசித்து கேள்விகளைக் கேட்பதில்லை. நீங்கள் உற்று
கவனித்தால் தெரியும். கோபிநாத்தின் காதுகளில் ஒரு சிறிய ஒலிவாங்கி
செருகப்பட்டிருக்கும். அதில்தான் நிகழ்ச்சிக்கு வெளியே அமர்ந்திருக்கும்
ஆண்டனியின் கேள்விக் கணைகள் சாரை சாரையாக வந்து விழும். அதைத்தான்
கோபிநாத் கேட்பார்; பார்வையாளர்களிடம் பேசுவார். ஆகவே, கோபிநாத் ஒரு
பொம்மைதான். அதை இயக்குபவர் ஆண்டனி.
அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் நான் சற்றும் எதிர்பாராத விதமாக
கெரில்லாத் தாக்குதலைப் போல் கோபிநாத்திடமிருந்து அந்தக் கேள்வி வந்து
விழுந்தது. “சாரு, நீங்கள் நித்யானந்தாவை ஆதரித்தீர்கள்; அவரைக் கடவுள்
என்றீர்கள். அதனால் உங்களுடைய வாசகர்கள் எல்லோரும் நித்யானந்தாவின்
பின்னால் போனார்கள்; இப்படி உங்கள் வாசகர்களைத் திசை திருப்பியதற்காக
வருத்தப்படுகிறீர்களா?” கொஞ்சம் திகைத்துப் போன நான் ”ஆமாம்” என்றேன்.
விடாமல் தொடர்ந்து ”அதற்காக உங்கள் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்
கொள்வீர்களா?” என்றார் கோபிநாத்; அதாவது, ஆண்டனி. எனக்கு அந்தக்
கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
ஒரே குழப்பமாக இருந்தது. நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? நான்
என்ன தவறு செய்தேன்? நானா நடிகையுடன் படுக்கையில் புரண்டேன்? அப்படியே
புரண்டிருந்தாலும் அதற்காக நான் என் மனைவியிடம் அல்லவா மன்னிப்புக் கேட்க
வேண்டும்? வாசகர்களிடம் ஏன் கேட்க வேண்டும்? மேலும், நான் என்றைக்குமே
பிரம்மச்சரியத்தை போதித்தவன் அல்லவே? நித்யானந்தாவைக் கூட விமர்சிப்பது ஏன்
என்றால், மற்றவர்களுக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை போதித்த அவர், தான்
மட்டும் அதற்கு எதிராக நடந்து கொண்டார் என்ற காரணத்தினால்தானே? மேலும்,
நான் என்ன நித்தியின் பார்ட்னரா? எனக்கும் அவருக்கும் ஆறு மாதத்
தொடர்புதானே இருந்தது?
ஒரு நொடியில் இப்படியெல்லாம் யோசித்த நான் ”நித்யானந்தாவை நம்பி ஏமாந்த
கதையைத்தானே குமுதம் ரிப்போர்ட்டரில் விளக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்?”
என்று கோபிநாத்திடம் சொன்னேன். ஆனால் கோபிநாத் மூலம், கேட்ட கேள்வியையே
விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டு என்னை முட்டுச் சந்தின் பக்கமாக
நகர்த்திக் கொண்டிருந்தார் ஆண்டனி. கிட்டத்தட்ட ஒரு கொலைவெறியுடன் அவர்கள்
அன்றைய தினம் என்னைத் தாக்கினார்கள். சேடிஸ்ட்டுகளைப் போல் நடந்து
கொண்டார்கள். இது சம்பந்தமாக என் வாசகர்களிடமிருந்து எனக்கு நூற்றுக்
கணக்கான மின்னஞ்சல்கள் வந்துள்ளன.
பல் பிடுங்குவதைப் போல் என் வாயிலிருந்து மன்னிப்பு என்ற வார்த்தையைப்
பிடுங்கினார்கள் ஆண்டனியும் கோபிநாத்தும். பிறகு நிகழ்ச்சியின் மற்றொரு
விருந்தினரான பவா செல்லத்துரையை விட்டும் என்னை அடித்தார்கள். பவா ஒரு
கம்யூனிஸ்ட். அவரும் நீயா நானா கோஷ்டியோடு சேர்ந்து கொண்டு நான் வாசகர்களை
ஏமாற்றியது (!) தவறு என்றார்.
ஏன் ஐயா, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி
விடுமா? ஒரு பெண் ஒருவனை நம்பிக் காதலித்துத் திருமணம் செய்து
கொள்கிறாள். பிறகுதான் தெரிகிறது, அவன் ஏற்கனவே ஏழு கல்யாணம் செய்து
கொண்டவன் என்று. தாலியை அறுத்துப் போட்டு விட்டு வந்து விடுகிறாள்.
என்னுடைய நிலைமையும் அதுதான். நித்தி தன்னை சாமி என்றார். எனக்கு
ஆசாமியையும் பிடிக்கும்; சாமியையும் பிடிக்கும். மேலும், மிக வெகுளியான
ஒரு ஆள் நான். நீங்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவேன். ஏனென்றால்,
நீங்கள் ஏன் என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். ஒருவர்
சொல்வதை நான் ஏன் பொய் என்று நினைக்க வேண்டும்? அப்படி நினைப்பது என்னைப்
பொறுத்தவரை அராஜகமாகத் தோன்றும். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் அதை
உண்மை என்றுதான் நம்புவேன். அதுவும் ஒருவர் தன்னைக் கடவுள் என்று சொல்லிக்
கொள்வது எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? ஒருவர் கடவுளிடம் போய்
ஜேப்படித் திருட்டு செய்ய முடியுமா? அதனால்தான் நித்தியை நம்பினேன்.
இதில் நான் என் வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம்
எங்கிருந்து வந்தது? எங்கள் எல்லோரையும் ஏமாற்றிய நித்தி அல்லவா எங்களிடம்
மன்னிப்புக் கேட்க வேண்டும்?
உதாரணமாக, நான் நித்தியை நம்புவதற்கு முன்னதாக மார்க்சீயத்தை
நம்பினேன். ஸ்டாலினையும் மாவோவையும் நம்பினேன். இந்தியாவில் நக்சல்பாரி
இயக்கத்தை உருவாக்கிய சாரு மஜூம்தாரின் முதல் பாதியைத்தான் என் பெயராக
ஆக்கிக் கொண்டேன். நான் மட்டும் அல்ல; 30 ஆண்டுகளுக்கு முன்பு உலகில்
எத்தனையோ பேர் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டார்கள். அதில் கலைஞர்கள்
மற்றும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
பிறகு நடந்த கதை நம் எல்லோருக்கும் தெரியும். கம்யூனிஸ்ட் ரஷ்யா
வீழ்ந்த பிறகு உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் பெயரால் நடந்த கொலைகள்
வெளியே தெரிய ஆரம்பித்தன. ஹிட்லர் கொன்றது 90 லட்சம் பேர் என்கிறது
புள்ளிவிபரம். ஆனால், மக்கள் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கம்யூனிசத்தால்
ஸ்டாலினின் ரஷ்யாவில் கொல்லப்பட்டது 60 லட்சம் பேர்; மாவோவின் சீனாவிலும்
60 லட்சம். கம்ப்யூச்சியாவில் இரண்டே ஆண்டுகளில் இரண்டு லட்சம் பேர்
படுகொலை. இதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிசத்தின் பெயரால் பல
லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.
இந்த நிலையில், தான் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தோம் என்பதற்காக யாராவது
மன்னிப்புக் கேட்டார்களா? பவா செல்லத்துரை கேட்டாரா? போலிச் சாமியார்கள்
ஒன்றும் இந்த அளவுக்குச் செய்யவில்லையே? தங்கள் சுயநலத்துக்காக மக்களை
ஏமாற்றினார்களே தவிர ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்று சக மனிதர்களைக்
கொல்லவில்லையே?
தான் ஒரு தத்துவத்தை நம்பியதற்காக யாரும் மன்னிப்பு கேட்க வேண்டிய
அவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஏதோ
ஒரு தத்துவத்தை அல்லது நபரை நாம் நம்புகிறோம். பிறகு அந்த நம்பிக்கை
வீழ்ச்சி அடையும்போது அதை நாம் ஒரு அனுபவமாகக் கொள்கிறோம். அப்படி
நம்பியதற்காக யாரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய
அவசியமில்லை.
மேலும், நித்யானந்தாவை பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த
ஊடகங்கள் குமுதமும் விஜய் டி.வி.யும்தானே தவிர நான் அல்ல; குமுதத்தில்
நித்தியின் தொடர் ஐந்தாறு ஆண்டுகளாக வந்து கொண்டிருந்தது. நித்தியை
குமுதம் சாமியார் என்றே பொதுமக்கள் அழைத்து வந்தனர். மேலும், நித்தியின்
பிரசங்கம் விஜய் டி.வி.யில் வாரம் இரண்டு முறை வந்து கொண்டிருந்தது. ஆக,
நித்தியை பிரபலப்படுத்திய குமுதமும், விஜய் டி.வி.யும் இப்போது மக்களிடம்
மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆண்டனியும், கோபிநாத்தும் சொல்வார்களா?
சொன்னால் அவர்களின் சீட்டே கிழிந்து போகும். சீட்டு கிழிந்தால் இந்த
நிகழ்ச்சிக்காக அவர்கள் இருவருக்கும் கிடைக்கும் மிகப் பெரிய தொகை
கிடைக்காமல் போகும். அதனால் அது பற்றி நம் நீயா நானா நாயகர்கள் வாய்
திறக்க மாட்டார்கள். எவனாவது ஒரு எழுத்தாளன் மாட்டினால்தான் தமது கோரைப்
பற்களைக் காட்டுவார்கள்.
மேலும், நித்யானந்தாவை நம்பி அவருடைய எழுத்தையும், பேச்சையும்
பிரபலப்படுத்திய குமுதமும் விஜய் டி.வி.யும் மன்னிப்புக் கேட்க வேண்டும்
என்று சொல்லும் அளவுக்கு நான் மூடன் அல்ல. வாழ்க்கையே நம்பிக்கையில்தான்
ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு தத்துவத்தையோ ஒரு நபரையோ நாம் நம்புகிறோம்.
பிறகு அந்தத் தத்துவம் அல்லது நபர் நமக்கு அளித்த தோற்றம் பொய் என்று
தெரிந்து அதை விட்டு விலகி விடுகிறோம். அதைத்தான் குமுதமும், விஜய்
டி.வி.யும், நானும் செய்தோம். இதில் மன்னிப்புக் கேட்பதற்கெல்லாம் ஒன்றுமே
இல்லை.
ஆனால் எனக்கும் இதன் மூலம் ஒரு படிப்பினை கிடைத்தது. டி.வி.யில் முகம்
தெரிய வேண்டும் என்ற அற்பத்தனத்துக்கு எனக்குக் கிடைத்த அடியே இது என்று
இந்தக் கசப்பான நிகழ்ச்சியின் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன்.
(இந்தக் கட்டுரையை லக்கிலுக், நர்சிம், தண்டோரா மணி, அதிஷா,
கேபிள் ஷங்கர் போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் வெளியிட்டு இதைப்
பரவலாக வாசிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விஜய் டி.வி.யின்
பார்வையாளர் தளம் மிக விரிந்தது. கோடிக்கணக்கான பேர் பார்க்கக் கூடியது.
அதனால் என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும் என்று
நினைக்கிறேன்).
Read More »
Read more...